ஆப்பிள் சீடர் வினிகரில் நன்மை.. தீமை எது அதிகம்..?

ஆப்பிள் சீடர் வினிகர் என்பது புளித்த ஆப்பிள் சாறு, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறது. செரிமானம், நெஞ்செரிச்சல் உள்பட கூந்தல், சரும பராமரிப்பு என பலவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

தினமும் சாப்பிடும் முன், 2 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிப்பதுடன், குறைந்த கலோரி உடைய உணவுகள் எடுத்து கொள்வதால் உடல் எடை விரைவாக குறைவது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைப்பதில் ஆப்பிள் சீடர் வினிகர் பயனிப்பதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. உடல் எடையை குறைப்பதுடன், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது.

உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுகிறது. நீரிழிவுக்கு மருந்தாக பயன்படுத்த முடியாது. எனினும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஒருசிலர் வயிற்றெரிச்சல், நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணமாகவும், தலையில் பொடுகு தொல்லை நீங்கவும் இதை பயன்படுத்துகின்றனர்.

ஆப்பிள் சீடர் வினிகரில் அமிலம், வினிகர் அதிகமிருப்பதால், சிலருக்கு தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தலாம். மேலும், பற்களின் எனாமலில் அரிப்பை ஏற்படுத்தலாம்.

ஆப்பிள் சீடர் வினிகரை, எப்போதும் தண்ணீருடன் கலந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகளவில் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்த கூடாது. இல்லாவிட்டால் அஜீரணக்கோளாறு ஏற்படுவதுடன், குமட்டல் உணர்வு ஏற்படலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர், இன்சுலின், மலமிளக்கி மருந்துகளுடன் எதிர்வினையாற்ற கூடும். எனவே வினிகரை பயன்படுத்தும் முன் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.