சின்னம்மை நோய் யாருக்கெல்லாம் வரும்?
சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் வெயில் காலத்தில் பரவும் வைரஸ் தொற்று. பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பள்ளிப்பருவத்தினருக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
ஒருமுறை தொற்று கண்டவர்களுக்கு பெரும்பாலும் மீண்டும் ஏற்படுவதில்லை.
இதற்குக் காரணம், முதல் தொற்றின் மூலம் பெறப்படும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியானது மீண்டும் அதே நபருக்கு சின்னம்மை வராமல் தடுக்கிறது.
குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு முதல்முறை குழந்தைப் பருவத்தில் சின்னம்மை வந்திருந்தாலும் மீண்டும் வளரிளம் பருவத்தில் அல்லது வயது முதிர்ந்த நிலையிலும் வரலாம்.
குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு அச்சுறுத்தல் தராத சாதாரண நோயாகக் கடந்து செல்லும்.
எனினும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், எடை குறைவான, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர், முதியோருக்கு சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம்.
இதர வைரஸ் காய்ச்சல்கள் போல முதல் இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சலுடன் ஆரம்பிக்கும்.
பின் நெஞ்சுப்பகுதி, முதுகுப்பகுதி, முகம் எனத் தொடங்கி உடலின் அனைத்துப் பகுதியிலும் கொப்புளம் தோன்றும். சின்னம்மைக்கு எதிராகவும் தடுப்பூசி உள்ளது.