அட்சய திருதியை ஒட்டி தங்கம் விலை குறையுமா? நகை வாங்கி வைக்கலாமா?

வழக்கமாக அட்சயத்திருதியைக்கு பலரும் தங்கம் வாங்குவது வாடிக்கையாக தொடர்கிறது.

இந்நிலையில், தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அட்சயத் திருதியை முன்னிட்டு தங்கம் விலை குறையுமா என பலரிடமும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால், தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை. இந்த ஆண்டுக்குள்ளேயே கணிசமாக உயர வாய்ப்புண்டு என்று 'கோல்டுமேன் சாக்ஸ்' என்ற முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் வட்டி விகிதம் நவம்பர் முதல் குறைய ஆரம்பிக்கும். இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், பல்வேறு பாதிப்புகளை எதிர்பார்ப்பதால், இப்போதே, தங்கத்தை வாங்கிச் சேமித்து வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலும், அநித்திய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், தற்போது ஒரு அவுன்ஸ் 2,304.40 டாலர் விற்கக்கூடிய தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 2,700 டாலராக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இன்னும் சூழல் மோசமானால் 3,130 டாலர் வரையும் கூட உயரக்கூடும் என தெரிவித்துள்ளது கோல்டுமேன் சாக்ஸ்.

அதனால் பணம் இருக்கும்போது, நகை வாங்கி வைக்கலாம். எதிர்கால உலகச் சூழல், நாம் நினைப்பது போல், சுமூகமாக இருக்கப் போவதில்லை. அப்போதைய பாதுகாப்பு அரணாக, தங்கம் செயல்படக்கூடும்.