தமிழர்களின் அழகியலில் அணிகலன்களுக்கு... அதாங்க நகைகளுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு.
அந்த கால ராஜாக்களின் காலம் முதல் இன்றைய மாடர்ன் புள்ளீங்கோ வரை ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பொன்னாலும், வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம் போன்ற நவமணிகளாலும் ஆன ஆபரணங்கள் அந்தந்த காலகட்டத்துக்கேற்ப அணியப்பட்டன.
டெம்பிள் கலெக்ஷன், பிரைடல் மேக்கப் எனும் பெயரில் திருமண வைபவங்களில் பழங்கால பாரம்பரிய டிசைன்களில் நகைகள் அணிவதே இப்போதைய டிரெண்ட்.
இதில் நகை அணி வகையில் தலையணி, காதணி, கழுத்தணி, புய அணிகலன்கள், கை அணிகலன், கைவிரல் அணிகலன்கள், கால் அணிகலன்கள், கால்விரல் அணிகள், ஆண்களின் அணிகலன்கள் போன்றவை உள்ளன.
நகைகள் பட்டியலில் நெற்றிப் பட்டம், சடைநாகம், மூக்குத்தி, தோடு, கடுக்கன், தொங்கட்டான், சங்கிலி, அட்டியல், தாலி, பாம்படம், பதக்கம், காப்பு, வளையல், மோதிரம், ஒட்டியானம், வளை, சதங்கை, காற் சங்கிலி, சிலம்பு, மெட்டி போன்றவை உள்ளன.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல்பாகம் டீசரில் வெளியான குந்தவை, நந்தினி அதாங்க.. த்ரிஷா, ஐஸ்வர்யாராயின் அணிகலன்கள் அனைவரையும் பிரமாண்டத்தின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இருவரும் அணிந்துள்ள மாங் டிக்கா, சூடாமணி, ராகோடி, பரண்டா, ஜூமர், மத்த பட்டி, அட்டிகை, ஹாரம், ஒட்டியாணம் போன்ற ஆபரணங்கள் சோழர்கள் காலத்துக்கு சென்ற பிரமிப்பை உண்டாக்குகிறது.
பெண்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று ஆண்களும் வீரக்கழல், வீரக் கண்டை, பவள வடம், காப்பு, பதக்கம் உட்பட பல ஆபரணங்களை அணிந்தது குறிப்பிடத்தக்கது.