ADDED : மே 03, 2010 02:56 AM
பெங்களூரு:சாமியார் நித்யானந்தாவின் ஜாமீன் மனு இன்று ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்யானந்தாவை, பெங்களூரு சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பல கட்டங்களுக்கு பின், ராம்நகர் மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சாமியார் நித்யானந்தாவை அழைத்து வந்த போது, அவரது சீடராக உள்ள பல்வேறு தொழிலதிபர்கள் ஒதுங்கியிருந்தபடி, நீதிமன்றத்திற்கு வெளியே, கார்களிலிருந்தவாறே பார்த்திருந்தனர். சில கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் தங்களை வெளிகாட்டி கொள்ளாமல் இருந்தனர்.தங்கள் பெயரை தெரிவிக்காமல் அவர்கள் கூறுகையில், ""சாமியார் நித்யானந்தா மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களில் உண்மையில்லை என்று நிரூபித்து வெளியே வருவார். அவர் வந்து எங்களை தொடர்ந்து வழி நடத்தி செல்வார்,'' என்றனர். பிடதியிலுள்ள ஆசிரமத்தில் இன்னமும் ஏராளமான பக்தர்கள் தங்கி தியானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்கின்றனர். ஆசிரமத்தில் உள்ள பெண்கள் பலரும், வழக்கம் போல் வெள்ளை நிற ஆடையில் உலா வருவதை பார்க்க முடிகிறது.சீனியர் சீடர்கள் காவி உடை தான் அணிகின்றனர். ஆசிரமத்தை விட்டு வெளியே வரும் சீடர்கள் மட்டும், தங்கள் பாதுகாப்பு கருதி சாதாரண உடையில் வருகின்றனர்.
ஆசிரமத்தின் நுழைவாயிலில், போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. சில சீடர்களும், ஆசிரம பாதுகாவலர்கள் மட்டுமே உள்ளனர். ஆசிரமத்தின் உட்பகுதியில் போலீஸ் வேன் நிறுத்தப்பட்டுள்ளது.ஆசிரமத்திற்கு வருபவர்களை நன்கு விசாரித்த பின்னரே உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர். பத்திரிகையாளர்களை அனுமதிப்பது இல்லை. சீடர்கள் இரவும் பகலும் கண்காணித்து வருகின்றனர்.
ஆசிரமத்தில் இருந்த 1,008 லிங்கங்களுக்கு, தினமும் பலவித பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. சாமியார் சிறைக்குள் அடைக்கப் பட்ட பின், இந்த லிங்கங்களுக்கு பூஜைகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், மைசூரில் சாமியார் நித்யானந்தாவிற்கு அடி கொடுப்பது போன்று தெரு நாடகங்கள் நடத்தி, மக்களிடம் விழிப்புணர்வு செய்தனர். இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, சாமியார் நித்யானந்தா தாக்கல் செய்த மனு, ராம்நகர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

