சுருதி பேதம் முதல் சூப்பர் ஸ்டார் வரை... கலையுலகின் 'தர்பார்' ரஜினி !

கலைந்த முடி, கருப்பு நிறம் சகிதமாய் கால் பதித்து, கனவுலக நாயகர்களின் இலக்கணத்திற்கு புது வடிவம் தந்த 'புதுக்கவிதை' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்த தினம் இன்று. அவரை பற்றிய ஹைலைட்ஸ்...

ஆன்மிகத்தின் ஆழம் அறிந்த இந்த அபூர்வ நாயகன், 1950, டிச., 12ம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தார். பால்ய பருவத்திலேயே தாயை இழந்த ரஜினி, அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்தார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன் ஆபீஸ் ப்யூனாக, மூட்டை தூக்கும் தொழிலாளியாக, தச்சுப் பட்டறை தொழிலாளியாக மற்றும் பஸ் கண்டக்டராக பணிபுரிந்துள்ளார் ரஜினி.

கே.பாலசந்தரின் பார்வை இவர் மீது பட, 1975ல் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடிகராக அறிமுகமானார். சிவாஜிராவ் என்ற இயற்பெயரை சினிமாவுக்காக ரஜினிகாந்த் என மாற்றம் செய்தார் பாலசந்தர்.

'மூன்று முடிச்சு', '16 வயதினிலே' என ஆரம்ப காலங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி, முதன் முதலில் குணச்சித்திர வேடமேற்று நடித்த திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறி?'

ரஜினி கதாநாயகனாக நடித்து வெளிவந்த முதல் படம் 'பைரவி'. இவரின் முதல் முழு நீள நகைச்சுவை திரைப்படம் “தில்லு முல்லு”. பாலிவுட், ஹாலிவுட்டிலும் தடம் பதித்திருபப்து குறிப்பிடத்தக்கது.

'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை உறுதி செய்த படம் 'முரட்டுக்காளை'. கதை, திரைக்கதை எழுதி தயாரித்த முதல் திரைப்படம் 'வள்ளி'. 'பாட்ஷா' திரைப்படம் தான் ரஜினியின் அரசியல் பார்வையை உலகுக்கு காட்டியது

தமிழக்கத்தில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்த 'முத்து' திரைப்படம், ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்டு அங்கும் ரஜினிக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த 'சிவாஜி'யும், 'எந்திரன்' திரைப்படமும் பல சாதனைகள் புரிந்து, தமிழ் திரையுலகில் புதிய வரலாறு படைத்தன.

எதிர்பார்த்த அளவு ஓடாத ரஜினியின் 'பாபா' திரைப்படம், தற்போது நவீன தொழில்நுட்பத்துடன், டிஜிட்டல் வடிவில் புதுப்பொலிவுடன் ஒரு சில மாற்றங்களுடன், அவரது பிறந்த நாளை ஒட்டி வெளியாகி உள்ளது.

ரசிகர்களின் நீண்ட காலமாக வேண்டுகோளின் படி, தேர்தலை சந்திக்கப்போவதாக கூறிய ரஜினி, பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி பின்வாங்கினார்.

பத்மபூஷன், பால்கே, கலைமாமணி என இவர் வாங்கிய விருதுகளின் பட்டியல் நீளமானது. அயராத உழைப்பு இருந்தால் சாமானியனும் சாதிக்கலாம் என்பது, ரஜினி பயணித்த பாதை உணர்த்தும் உண்மை.