நிறைய பழங்களை உண்போருக்கு, மனசோர்வு குறையும் : ஆய்வில் தகவல்

தினமும் நிறைய பழங்களை உணவாக எடுத்து கொள்வோருக்கு, நேர்மறையான மனநிலையுடன், மன சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக பிரிட்டன் பல்கலை ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக எவ்வளவு பழங்கள் எடுத்து கொண்டோம் என்பதை கணக்கில் கொள்ளாமல், தொடர்ச்சியாக பழங்களை உணவாக எடுத்து கொண்ட நபருக்கு, மன சோர்வுக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

பழங்களை குறைவாக உண்பவர்களிடம் ஞாபக மறதி, அதீத கவலை, பதற்றம், விரக்தி காணப்படுகிறது.

பழங்கள், காய்கறிகள் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தி, நார்ச்சத்து மற்றும் நுண்சத்துகள் கொண்டவை தான். அவை மூளையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

ஆனால் காய்கறிகளை சமைக்கும் போது அவற்றின் சத்துகள் குறைந்து விடும். பழங்களை நாம் சமைக்க மாட்டோம். எனவே அதன் தாக்கம் மூளை வளர்ச்சிக்கு அதிகளவில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.