சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த 'சின்னக் கலைவாணர்' விவேக் பிறந்த தினம் இன்று...!

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணியில், 1961ல் இதே நாளில் பிறந்தவர் விவேகானந்தன் எனும் விவேக். படிப்பு மட்டுமின்றி, இசை, பரதநாட்டியத்திலும் தேர்ந்தவர்.

டெலிபோன் ஆபரேட்டராக துவங்கி, தலைமைச் செயலகத்தில் இளங்கலை உதவியாளராக பணியாற்றினார். இதற்கிடையே அவ்வப்போது நகைச்சுவை நிகழ்ச்சியும் நிகழ்த்தி வந்தார்.

இவரின் திறமையை அறிந்த கே.பாலசந்தர் மனதில் உறுதி வேண்டும் படத்தில் வாய்ப்பளித்தார். 90களின் பிற்பகுதியில் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள விவேக் நான்தான் பாலா, வெள்ளை பூக்கள் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

நகைச்சுவையோடு, சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கூறி தனது ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்ததால், சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டார்.

செழிப்பான நாட்டை உருவாக்க நாடு முழுவதும் மரம் நடவேண்டும் என்ற கொள்கையை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது நிஜ வாழ்வில் சாத்தியப்படுத்தி பிறருக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.

இவரது மகன் பிரசன்னகுமாரின் இறப்பால் ஏற்பட்ட மன உளைச்சலால், சில ஆண்டுகள் சினிமாவில் ஜொலிக்காத நிலையில், அதிலிருந்து மெல்ல மீண்டு, படங்களில் மீண்டும் நடிக்கத் துவங்கினார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மீதுள்ள அதீத அன்பு காரணமாக, அவரின் பசுமை இந்தியா திட்டத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றதில் விவேக்குக்கு முக்கிய பங்கு உண்டு.

2009ல் மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். தமிழ்நாடு அரசு சினிமா விருது, பிலிம் பேர் விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

2021 ஏப்ரல் 16ல் தன் 59வது வயதில் மாரடைப்பால் காலமானார். இறப்பதற்கு முன்பு கூட கொரோனாவுக்கு அனைவரும் தடுப்பூசி போடுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இப்படி சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த விவேக் இன்று இல்லாவிட்டாலும், அவரின் கருத்துகள் காலம் முழுக்க பேசும்; அவர் முன்னெடுத்த மரக்கன்று நடும் பணி பல தலைமுறைக்கும் பயன் தரும்.