கிறிஸ்துமஸ் பண்டிகையை ஸ்பெஷலாக்கும் பிளம் கேக் ரெசிபி

இதோ விடிந்தால் கிறிஸ்துமஸ் பண்டிகை. இதற்காகப் பிடித்தவர்களுக்கு கேக் தயார் செய்து கொடுத்து அசத்த பலரும் நினைப்பர். எனவே, வீட்டிலுள்ள பொருட்களை வைத்து பிளம் கேக் செய்ய எளிய ரெசிபி...

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 100 கிராம் சர்க்கரையைக் கொட்டி உருகும் வரை கிளறவும். பின், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சிரப் போன்ற பக்குவத்தில் இறக்கிவிடவும்.

ஒரு பாத்திரத்தில் 200 கிராம் வெண்ணெய்யைக் கொட்டி, 350 கிராம் கருப்பு உலர் திராட்சை, சிறிது ஆரஞ்சு பழத் தோல், அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

மிக்சி ஜாரில் 100 கிராம் சர்க்கரை, சிறிதளவு பட்டை - 2, ஏலக்காய் - 4, கிராம்பு - 4 ஆகியவற்றைச் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பவுலில் 3 மூட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கலக்கிய பின்னர், சர்க்கரை 100 கிராம், மைதா மாவு 250 கிராம், பேக்கிங் சோடா 1 டீஸ்பூன் மற்றும் உப்பு 1/4 டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இதனுடன் செர்ரி பழம், முந்திரிப் பருப்பு, கருப்பு திராட்சை கலவை, சர்க்கரை சிரப் ஆகியவற்றையும் அடுத்தடுத்து சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

கேக் மோல்டு பாத்திரத்தின் அடியில் வெண்ணெய் பேப்பரை வைத்து, அதில் இந்த கலவையை நிரப்பவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி ஏதாவது தட்டு வைத்து, குறைவான சூட்டில் இதை வேக விடவும்.

இல்லாவிட்டால், ஓவனில் 30 நிமிடம் வைத்து வேக வைத்து எடுத்தால், சுவையான, மிருதுவான பிளம் கேக் இப்போது தயார். ஹே.. ஹே.. ஹேய்... ஹேப்பி கிறிஸ்துமஸ் !