நார்ச்சத்துக்கள் பைப்ராய்டு வருவதை தடுக்குமா?
கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும் பைப்ராய்டு எனப்படும் சதைக் கட்டிகள்.
குழந்தைப் பருவத்திலிருந்தே நார்ச்சத்து உள்ள உணவுகள், கீரைகள் சாப்பிடாமல் இருப்பது, சதைக்கட்டிகள் ஏற்படக்கூடிய காரணங்களில் ஒன்றாகும்.
இது தவிர, உடற்பயிற்சியின்மை, நடக்காமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது, உயரத்திற்கு ஏற்ப உடல் எடையுடன் இல்லாமலிருப்பது இவையும் வேறு சில காரணங்களாகும்.
30 - 35 வயதில் சரியான உடல் எடையுடன் இருந்தால், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பல வேண்டாத பிரச்னைகளை தவிர்க்கலாம்.
காலை உணவில், எண்ணெயில் பொரித்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை தவிர்த்து, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், ஆப்பம் என்று சாப்பிட வேண்டும்.
மதிய உணவில் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகை கீரை இருக்க வேண்டும். முருங்கைக் கீரை வாரத்திற்கு 2 நாட்கள் சாப்பிடலாம். இதில், இரும்பு சத்து அதிகம்.
கறிவேப்பிலையில், இரும்பு, நார்ச்சத்து இரண்டும் உள்ளன. வாழைத்தண்டு, பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு, மிளகு, சீரகம், பூண்டு, தனியா, கட்டிப் பெருங்காயம், இஞ்சி சேர்த்த ரசம் என அனைத்திலும் நார்ச்சத்து அதிகமுள்ளது. .
வாரத்திற்கு ஓரிரு நாட்கள், குறைந்த அளவு கொள்ளு சேர்த்துக் கொள்ளலாம். அதிகம் போட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்பதால், சிறிதளவு பயன்படுத்தலாம்.
உடல் எடை குறைவாக இருந்தால், உணவிலேயே சதைக் கட்டிகளை சரி செய்யலாம். சற்று அதிக உடல் எடையுடன் இருப்பவர்களுக்கு, மருந்துகளுடன் உணவு கட்டுப்பாடும் தேவைப்படலாம்.