காபி குடிப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கிறதா?

காபி மற்றும் காஃபின் கலந்த பானங்களை அருந்தும் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனரீதியாக பாதிப்புகள் ஏற்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக காஃபின் மூலப்பொருளானது ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், இது முறையான தூக்கத்தை பாதிக்கிறது.

காஃபின் காரணமாக குழந்தைகள் சரியாக தூங்கவில்லை என்றால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு கவனச் சிதறல் மற்றும் மனநல பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

இது அவர்களது கல்வியை பாதிக்கக்கூடும். இதனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு காபி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகப்படியான காஃபின் உட்கொள்வதால் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி நேரடியாக பாதிக்கப்படுகிறது.

குழந்தைகள் காஃபின் சார்ந்த சோடா பானங்கள், கோல்டு காபி, சாக்லேட் போன்றவற்றை உட்கொள்வதை தடுக்க வேண்டும். குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு காஃபின் சார்ந்த அனைத்து உணவுகளும் ஆபத்தானவை.

தவிர்த்து பழச்சாறு, ஊட்டச்சத்து பானங்கள், இளநீர், பால், மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம் என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர்.