போலி வீடியோக்களுக்கு கடிவாளம்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான டீப்பேக் வீடியோக்களும், உண்மைக்கு மாறாக எடிட் செய்யப்பட்ட பதிவுகளும் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பழைய போட்டோக்கள் மற்றும் பழைய வீடியோக்களை, தற்போது நிகழ்ந்தது போல சித்தரித்து வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளது.
இத்தகைய தவறான தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உண்டாக்கி, அமைதியை சீர்குலைக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதை தடுக்க சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, இதுபோன்ற போலியான பதிவுகளைக் கண்டறிந்து உடனடியாக நீக்க, சமூக வலைதள நிறுவனங்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அரசு அமைப்புகள் மற்றும் துறைகள் சுட்டிக்காட்டும் ஆட்சேபகரமான பதிவுகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை காலதாமதமின்றி நீக்க வேண்டும் என கூறியுள்ளது.