வெளிநாட்டு சுற்றுலா செல்ல ஹாலிடே லோன் பெறுவதால்?
ஒரு பொருளை வாங்காமல் போய்விட்டோமே, அது விலை உயர்ந்துகொண்டே போகிறதே என்று பரபரப்பதை ஆங்கிலத்தில் 'பியர் ஆப் மிஸ்ஸிங் அவுட்' அல்லது 'போமோ' என்பர்.
அதேபோல், 'ஒருமுறை தான் வாழ்கிறோம், அதை அனுபவிக்க வேண்டாமா' என்ற கருத்தை 'யு ஒன்லி லிவ் ஒன்ஸ்' எனப்படும் 'யோலோ' என்று அழைக்கின்றனர்.
அதேபோல், வீட்டுக் கடன் இ.எம்.ஐ., பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவ செலவு என ஒரே பிக்கல் பிடுங்கல்.
இவற்றிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது.
அப்படிப்பட்டவர்கள் கடன் வாங்கியாவது சுற்றுலா போய், தங்கள் மனதை திருப்தி செய்து கொள்கின்றனர். அவர்கள் தான் இத்தகைய ஹாலிடே லோன் வாங்குகின்றனர்.
ஆனால், பெரும்பாலும் கையில் பணம் சேர்த்து வைத்து சுற்றுலா செல்வது தான் சரியாக இருக்கும். ஏனெனில், ஹாலிடே லோன் உங்கள் கழுத்தை நெரிக்கக்கூடும்.
இது பாதுகாப்பற்ற கடன் வகையில் வருவதால், வட்டி அதிகம். 2 லட்சம் ரூபாய் லோன் வாங்கினால், இ.எம்.ஐ., கட்டி முடிப்பதற்குள் 3 லட்சம் வரை செலுத்தியிருப்பீர்கள்.
இதனால், இ.எம்.ஐ., தொகையை செலுத்த வேண்டுமே என்று ஒவ்வொரு மாதமும் உங்கள் அன்றாட செலவுகளை சுருக்கி கொள்வீர்கள்.
சுற்றுலா சென்றால், மனமகிழ்ச்சி தான் கிடைக்கும். அதனால் எந்தவிதமான சொத்தும் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.