வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? அதற்கு வரி உண்டா?
நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த தங்கத்தை வாங்குவதற்கான பணம் நமக்கு எப்படி வந்தது என்பதை, வரி அதிகாரிகளுக்கு சொல்ல முடியும் என்றால் மட்டுமே வைத்துக் கொள்ளலாம்.
எந்த ஆதாரமும்மின்றி, ஒரு திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண், 250 கிராம் தங்கம் வைத்திருக்கலாம். ஆண்கள், 100 கிராம் தங்கத்தை மட்டுமே வைத்திருக்க முடியும்.
ஒருவர் தான் பெற்ற வருமானத்தில் வாங்கும் தங்கத்துக்கு வரி எதுவும் கட்டத் தேவையில்லை. மேலும் விவசாயம், பூர்வீகமாக பெற்ற பணம், சேமித்து வைத்த பணம் ஆகியவற்றின் வாயிலாக வாங்கும் தங்கத்திற்கும், வரி கட்ட தேவையில்லை.
ஆனால் விற்பனை செய்யும்போதோ அல்லது எக்சேஞ்ச் செய்யும்போதோ, தங்கத்துக்கான வரி என்பது, ஒருவர் எவ்வளவு காலம் தங்க நகை அல்லது நாணயங்களை வைத்திருந்தார் என்பதை பொறுத்து உள்ளது.
தங்கத்தின் விற்பனை வாயிலாக, குறுகிய காலம் அல்லது நீண்ட காலத்துக்கு ஈட்டப்படும் ஆதாயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, அதற்கேற்ப வரி விதிக்கப்படும்.
தங்கம் வாங்கியதற்கும், விற்பதற்கும் இடையேயான காலம், 3 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால், அது குறுகிய கால ஆதாயமாக கருதப்படும். இந்த ஆதாயங்கள், ஒருவரது மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டு, பின் அவரது வருமான வரி வரம்பு அடிப்படையில் வரி விதிக்கப்படும்.
இதுவே தங்கம் வாங்கியதற்கும், விற்பதற்கும் இடையேயான காலம், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இருந்தால், அது நீண்ட கால ஆதாயமாக கருதப்படும்.
இதற்கு, கூடுதல் கட்டணத்துடன் சேர்த்து, 20 சதவீத வரி விதிக்கப்படும். அத்துடன், 4 சதவீத செஸ் வரி விதிக்கப்படும். இதுபோக, தங்கத்தை வாங்கும்போது 3 சதவீத ஜி.எஸ்.டி.,யும் செலுத்த வேண்டியதிருக்கும்.
சோதனை நடவடிக்கைகள் அல்லது ரெய்டுகளின் போது, அரசு வழங்கியிருக்கும் வரம்பை விட குறைவாக இருந்தால், அதிகாரிகள் வீட்டில் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்து எடுத்துச் செல்ல முடியாது.