உடல் பருமன் மாயமானால் நோய்களும் மறைந்துவிடும்

முதுமையில் எலும்பு தேய்மானம், தசை வலுவிழப்பு இயல்பானவை. வயது அதிகரிக்கும்போது உடல் இயக்கம் குறைவதால், தசை அளவு குறைந்து அதற்குப் பதிலாக கொழுப்பு அதிகரிக்கும்.

இதுபோன்ற சமயங்களில், பி.எம்.ஐ. அளவு மாறாமல் இருந்தாலும் உடலில் கொழுப்பு அதிகரித்திருக்கும். சத்தமின்றி நாளடைவில் உடல் பருமனாக மாறக்கூடும்.

இதன் காரணமாக, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய்கள், புற்றுநோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

இயக்கம் குறைந்து, எடை அதிகரிப்பதால், மூட்டு வலி முதல் ஞாபக மறதி வரை பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக, உடல் பருமன் பிரச்னை முதியோரை பாடாய்படுத்தும்.

அதற்காக, உடல் எடை குறைக்கின்றேன் என்ற பெயரில் பட்டினி கிடப்பது கூடாது. அதீத உடற்பயிற்சி முதுமையில் கூடாது. திட்டமிட்ட கண்காணிப்புடன் எடை குறைப்பு பலனளிக்கும்.

மொத்த எடையில், 3 சதவீத எடை குறைப்பே ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு குறைய உதவுவதாக, ஆய்வுகள் கூறுகின்றன.

பாதுகாப்பான முறையில் எடை குறைய, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, புரதம் நிறைந்த சமநிலை உணவு, உடற்பயிற்சியுடன் வாரம் 2 நாட்கள் தசை வலுப்படுத்தும் பயிற்சி உதவும்.

வயதான பின் உடல் எடை அதிகரிப்பதை பலர் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவர். தன்னம்பிக்கை, சுதந்திரம், மரியாதையுடன் வாழ உடல் எடை சரியாக இருப்பது அவசியம்.