அதிகரிக்கும் சளி, காய்ச்சல் பாதிப்பு... காரணத்தை அறிய ஆய்வு துவக்கம்!
தமிழகத்தில் பருவ மழைக் காலம் நிறைவடைந்தாலும், குளிர் மற்றும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, நோய் பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னை, அதை சுற்றியுள்ள பகுதிகளில், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் கூடிய பாதிப்பு காணப்படுகிறது.
சிலருக்கு சளி, இருமல் குணமடைந்த பின், தலைவலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. குணமடைந்தாலும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில், தொற்றிக் கொள்கிறது.
இந்நிலையில், எந்த வகையான வைரஸ், தற்போது அதிகளவில் பரவி வருகிறது. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதா என கண்டறியும் ஆய்வை, சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லை.
அதேவேளையில், இன்ப்ளுயன்ஸா வைரஸ், நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் அடினோ வைரஸ் பாதிப்புகள் அதிகமாக உள்ளன.
காய்ச்சல், உடல் வலியுடன், சளி, இருமல் பாதிப்பும் இருப்பதால், சுவாசப் பாதையின் மேற்பகுதியில் ஏற்படும் தொற்றாகவே, இதைக் கருத முடிகிறது.
சிலரை தவிர மற்றவர்களுக்கு, ஒரு வாரத்திற்குள் குணமடைவதால், அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
ஆனாலும், வைரஸ் தன்மையை கண்டறிய, பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து, பகுப்பாய்வுக்கு உட்படுத்த உள்ளோமென, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.