முதியோருக்கு இம்சை தரும் இன்புளூயன்சா... கவனமாக இருந்தால் சமாளிக்கலாம் ஈசியா !

தற்போதைய பருவநிலை காரணமாக இன்புளூயன்சா பாதிப்பு முதியோர் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

இது ஒரு வைரஸ் தொற்று. சுவாச குழாய்கள், மூக்கு, தொண்டை, நுரையீரலை பாதிக்கிறது. சாதாரண சளி, காய்ச்சல் போன்றுதான் இதுவும். எளிதாக தொற்றிக்கொள்ளும்.

நேரடி தொடர்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நீரிழிவு, இதய நோய், நுரையீரல் நோய் போன்ற இணை நோய்கள் இப்பாதிப்பு ஏற்படவும், தீவிரமாகவும் காரணமாகவுள்ளன.

திடீர் காய்ச்சல், கடும் சோர்வு, உடல் வலி, தலைவலி, இருமல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல், உணவில் விருப்பமின்மை, வாந்தி, வயிற்றுபோக்கு இதன் அறிகுறிகள்.

பாதிப்பு தீவிரம் அடைந்தால், நுரையீரல் தொற்று ஏற்படும். காய்ச்சல் ஏற்படும் போது ரத்த, சளி பரிசோதனை, ஆக்சிஜன் அளவு போன்றவற்றின் வாயிலாக உறுதி செய்யலாம்.

இச்சமயத்தில் திட உணவு உட்கொள்ள சிரமம் என்பதால், தண்ணீர், கஞ்சி அதிகம் எடுக்கலாம். சுயமாக மருந்துகளை எடுக்காமல், டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

முதுமை வயதில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை, இன்புளூயன்சா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவது பாதிப்புகளை குறைக்கும்.

கைகளை அடிக்கடி சோப்பால் கழுவுதல், கூட்டமான இடங்களை தவிர்த்தல், சத்தான உணவு எடுப்பது அவசியம்.

குடும்பத்தில் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், நெருங்கிய தொடர்பை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது.