நகைச்சீட்டு போடுவது தங்கமான ஐடியாவா?
இந்தியா ஆதி காலம் தொட்டே, சேமிப்பு சார்ந்த பொருளாதார நாடாக உள்ளது. தங்கத்தை சேமிக்கும் பழக்கம், நம் வீடுகளில் உள்ள பெண்களுக்கு எப்போதும் உண்டு.
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை காரணமாக, மாதந்தோறும் நகை சீட்டு என்ற அடிப்படையில் சேமிப்பு பழக்கம் கொண்டவர்களும், இன்று திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகளவில் வர்த்தக செயல்பாடுகளில், டாலருக்கு மாற்றாக தங்கம் சார்ந்த சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள், தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
இதுபோன்று, தங்கத்தை வாங்கி குவிக்கும் நாடுகளால், அதன் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக, பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இதுபோன்ற சூழலில், மொத்தமாக பணம் செலுத்தி தங்க நகை வாங்குவதை விட, தங்க நகைச்சீட்டு வாயிலாக சிறுக, சிறுக சேமிக்க பெண்கள் களமிறங்கியுள்ளனர்.
தங்க நகை சீட்டு, சேமிப்புக்கு சரியான தீர்வாக இருந்தாலும், அதில் கவனமாக இருக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த, 5.5 ஆண்டுகளில் தங்க நகை, 126 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. நடுத்தர, ஏழை, எளிய மக்கள் மொத்தமாக தங்கம் வாங்குவது சிரமம். நகை சீட்டு தங்க சேமிப்புக்கு சரியான தீர்வாக இருக்கும்.
ஆனால், தங்கத்தை கிராம் கணக்கில் வரவு வைக்கும் நிறுவனங்களை, தேர்வு செய்ய வேண்டும்.
தங்கத்தை பணமாக வரவு வைக்கும் போது, இறுதியில் நம் கையில் இருந்து பணம் அன்றைய விலை பொறுத்து, அதிகம் போடவேண்டி இருக்கும்.
தங்க நகை சீட்டு போடும் போது, இலவசம், போனஸ் என மிகைப்படுத்தப்படும் தகவல்களை நம்பாமல், பாரம்பரிய நிறுவனங்களில், விதிமுறைகள் அனைத்தும் விசாரித்து சேர வேண்டும் என கூறப்படுகிறது.