புதிய செயலி வந்ததால் எம்-ஆதார் நீக்கம்

கடந்த பிப்ரவரியில் புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 3.1 கோடி முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

'ஸ்மார்ட் போன்' வாயிலாக ஆதார் சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப ஆதார் செயலியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

பழைய, 'எம் - ஆதார்' செயலியில் ஆதார் விபரங்களை சேமித்து பார்ப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மட்டுமே இருந்தன.

புதிய செயலியில், ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் எண் மற்றும் முகவரியை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை நேரடியாக மொபைல் போனிலேயே மேற்கொள்ள முடியும்.

ஆதார் செயலியை, 'ஜீவன் பிரமான்' செயலியுடன் ஒருங்கிணைத்து, ஓய்வூதியத்துக்கான ஆயுள் சான்று பெறவும் பயன்படுத்தலாம்.

மேலும், நம் ஆதார் எந்தெந்த சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற வரலாற்றையும் கண்காணிக்க முடியும்.

எனவே, பழைய செயலியை படிப்படியாக நீக்கி, அதிலுள்ள பயனர்களை புதிய ஆதார் செயலிக்கு மாற்றும் நடவடிக்கையை யு.ஐ.டி.ஏ.ஐ., (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) துவக்கியுள்ளது.

அதற்கான அறிவிப்பு, 'எம் - ஆதார்' செயலியில் வெளியிடப்பட்டு வருகிறது.