குளிர்காலத்தில் துளசி செடியை பராமரிப்பது எப்படி?
மூலிகை செடிகளில் ஒன்றான துளசி, ஆன்மிகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால், பலரின் வீடுகளிலும் பரவலாக வளர்க்கப்படுகிறது.
அதேவேளையில், குளிர்காலத்தில் பனி மற்றும் மூடுபனி காரணமாக துளசி இலைகள் வாடத்துவங்கும்
சூரிய ஒளி குறைவாக இருப்பதால் தேவையான வெப்பம் கிடைப்பது சிரமமே. எனவே துளசி செடிகள் செழித்து வளர இதோ டிப்ஸ்.
முதலில் சூரிய ஒளி நன்றாக கிடைக்குமிடத்தில் வைக்கவும். குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கக்கூடும் என்பதால் முடிந்தளவு நேரடி ஒளி படுமிடத்தில் வைக்கலாம்.
அதேபோல் பனி அல்லது குளிர்காற்று அதிகமாக வீசும்போது, துளசி செடி உள்ள தொட்டியை பாதுகாப்பாக வைத்து, மறுநாள் காலை மீண்டும் சூரிய ஒளி படுமிடத்தில் வைக்கவும்.
குளிர்காலத்தில் தண்ணீரை அதிகமாக ஊற்றாமல் குறைவாக விட வேண்டும். அவ்வப்போது ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
குளிர்காலம் துவங்கும் முன்னரே முடிந்தளவுக்கு மண்ணை கிளறியோ அல்லது மாற்றியோ விட்டால் தண்ணீரை தக்க வைக்காது; செடி அழுகுவதற்கான வாய்ப்பும் குறைவே.
களைகள், பழுத்த மஞ்சள் இலைகள், பூக்கள் மற்றும் விதைகளை அவ்வப்போது அகற்றி விட வேண்டும்; தண்டும் இலைககளுக்கு ஊட்டச்சத்துகள் வீணாகாமல் கிடைக்கக்கூடும்.
பழைய இலைகள், உலர்ந்த பூக்கள் போன்றவற்றை செடியை சுற்றி பரவலாக வைத்திருந்தால், உறைபனி மண்ணில் விழாமல் பாதுகாக்கலாம்.
செடியின் மீது ஒரு காட்டன் துணியை விரித்தாற்போன்று வைத்தால் வெப்பத்தை தக்க வைக்கக்கூடும்.