பீஹார் ராமாயண கோவிலில் நிறுவப்பட்ட 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம்
பீஹாரில் மோதிஹாரி அருகே கைத்வலியா கிராமத்தில், மஹாவீர் மந்திர் அறக்கட்டளை சார்பில் பிரமாண்டமான விராட் ராமாயண கோவில் கட்டப்பட்டு வருகிறது.
வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த இக்கோவில், உலகின் மிகப்பெரிய ராமாயண கோவிலாக உருவெடுத்து வருகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் அங்கோர்வாட் மற்றும் தமிழகத்தின் ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களின் வடிவமைப்பில், கட்டப்பட்டு வருகிறது.
இது, உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோவிலை விட மூன்று மடங்கு பெரிதாகும். இந்தக் கோவிலில், 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம் நேற்று முன்தினம் நிறுவப்பட்டது.
வேத மந்திரங்கள் ஒலிக்க, ராட்சத கிரேன்கள் உதவியுடன் பிரமாண்ட சிவலிங்கம் நிறுவப்பட்டது. அப்போது, பக்தர்கள், 'ஓம் நமசிவாய' என்ற முழக்கங்களை எழுப்பி வணங்கினர்.
மகாபலிபுரத்தில் உருவாக்கப்பட்ட 210 டன் எடையுள்ள இச்சிவலிங்கம், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ராட்சத டிரைலர் வாயிலாக மோதிஹாரிக்கு கொண்டு வரப்பட்டது.
ஒரே பாறையில் செதுக்கப்பட்டதால், உலகின் மிகப்பெரிய சிவலிங்கமாக இது கருதப்படுகிறது. இதில், 1,008 சிறிய சிவலிங்கங்கள் அடங்கியுள்ளன.
இதை வணங்குவதன் வாயிலாக, 1,008 சிவலிங்கங்களை வணங்கிய ஆன்மிக பலனை பக்தர்கள் பெறுவர்.
ராமாயண கோவிலுக்கு, 2023ல் அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்ட கட்டுமான பணிகள், இந்தாண்டு இறுதிக்குள்ளும், முழு பணிகள் 2030க்குள்ளும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.