பட்டாசு புகையால் இவ்வளவு பிரச்னையா? கவனம் அவசியம்!!
தீபாவளி என்றால் சந்தோஷம் தான்ஆனால் பட்டாசு புகையால் சிலருக்கு சிலசில பிரச்னைவரும். அவற்றை குறித்துப் பார்ப்போம்.
ஆஸ்துமா, மூச்சிரைப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு, அவை இன்னும் அதிகமாகும். மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் அரிப்பு, எரிச்சல் போன்றவை வரும்.
பட்டாசு வெடிக்கும்போது, வெளிவருகிற நைட்ரஜன் ஆக்சைடு, நுரையீரல்களின் உள்ளே இருக்கிற 'லைனிங்'குகளைச் சிதைத்துவிடும். அதனால், ஆக்சிஜனை உள்ளிழுப்பதில் கஷ்டம் ஏற்படும்.
பட்டாசு வெடிக்கும்போது எழும் சத்தம், ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு, பிரச்னையை மேலும் அதிகரிக்கும்.
இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஆட்டோ பாம் போன்ற வெடிகளின் சத்தத்தால், 'ஹார்ட் அட்டாக்' கூட வரலாம்; கவனம். இவர்கள், தங்கள் காதுகளை பஞ்சால் அடைத்துக் கொள்வது நல்லது.
நாய், பூனை, பறவைகளின் காது கேட்கும் தன்மை, நம்மைவிட அதிகம். சின்ன சத்தத்தைக்கூட அவற்றால் கேட்க முடியும். நாம் வெடிக்கிற படுபயங்கர வெடிச் சத்தமெல்லாம், அவற்றை செவிடு ஆக்கிவிடும்.
பட்டாசு வெடிக்கும் இடத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது. அதில் வெளிவருகிற நிக்கல் கலந்த புகை, வயிற்றில் உள்ள சிசுவின் மூளையில் பிரச்னைகளை ஏற்படுத்தி விடக்கூடும்.
பட்டாசில் உள்ள மாங்கனீஸ் - துாக்கமின்மை, படபடப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம். பாஸ்பரஸ் - கண்களையும், கல்லீரலையும் கெடுக்கும். நைட்ரேட் குறைந்தபட்சம் வாந்தி, அதிகபட்சம் வலிப்பை ஏற்படுத்தும்.