இன்று பிப் 29 - லீப் ஆண்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும்!
லீப் ஆண்டு ஜூலியஸ் சீசர் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கிமு 45 ஆம் ஆண்டு வாக்கில் சீசர் அறிமுகப்படுத்திய ஜூலியன் காலண்டர் நடைமுறையை தான் உலகம் பின்பற்றி வந்ததாகவும் தெரிகிறது.
அதன் பிறகு கிரிகோரியன் காலண்டர் முறையை 1582 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டு வந்தார் போப் 13ஆம் கிரிகோரி.
இந்த நாட்காட்டியில் பிப்ரவரி மாதத்துக்கு நான்காண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டது.
காரணம் பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது.
கூடுதல் நேரத்தை, ஒவ்வொரு நான்காவது ஆண்டிலும் ஒரே நாளாக சேர்க்கப்பட்டது. அதுவே லீப் ஆண்டாக அழைக்கப்படுகிறது.
லீப் ஆண்டில் பிப்., 29ல் பிறப்பவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிறந்த நாள் வரும். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூட பிப்.,29ல் பிறந்தவர்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை (பிப்., 29) சேர்க்கையில், 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடிகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதனால் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் ஆண்டு கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
ஆனால் அதுவே நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடும் ஆண்டுகளுக்கு மட்டுமே கூடுதலாக இந்த ஒரு நாள் சேர்க்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு 1600, 2000 ஆண்டுகள் லீப் ஆண்டுகள்.