நயன்-விக்கி குழந்தைப்பேறு; சமூக ஊடகங்களில் காரசாரம்!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் கடந்த ஜூனில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், நான்கு மாதங்களில் வாடகைத் தாய் மூலமாக இந்தத் தம்பதி குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த மகிழ்ச்சியான செய்தியை இரு குழந்தைகளின் பிஞ்சுப் பாதங்கள் தெரியும் புகைப்படத்தை பதிவிட்டு சூசகமாகப் பகிர்ந்துகொண்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதற்கு முன்னர் ஷாருக்கான், அமீர்கான், பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி உட்பட பல பாலிவுட் பிரபலங்களும் வாடகைத் தாய் முறை மூலமாகக் குழந்தை பெற்றுள்ளனர்.

நயன்-விக்கி தம்பதியர் சட்டத்துக்குப் புறம்பாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்தப் பிரச்னை ஒருபுறம் சென்று கொண்டிருக்க வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெறுவது நல்லதா, கெட்டதா என்கிற விவாதம் மறுபுறம் செல்கிறது.

நடிகர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாயகனாகவே தொடர்ந்து கொண்டிருக்க, நடிகைகளுக்கு மட்டும் திருமணத்துக்குப் பின் சினிமா வாழ்க்கை அஸ்தமித்துவிடுகிறது.

இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்தாலும் தனக்கு ஹீரோவாக நடித்தவருக்கே அம்மா, அண்ணி, மாமியார், பாட்டி வேடங்களில் நடிக்கும் விநோதமும் தமிழ் சினிமாவில் உண்டு.

தமிழ் சினிமாவின் மூத்த கதாநாயகிளான பத்மினி, சரோஜாதேவி உள்ளிட்டோர் துவங்கி குஷ்பு, சிம்ரன் வரை அனைத்து லேடி சூப்பர் ஸ்டார்களின் நிலையும் இதுதான்.

சினிமா மட்டுமின்றி பல்வேறு துறைகளில் பணிக்குச் செல்லும் பெண்கள் பலர் குழந்தைக்காக பிரியமான வேலை, வாழ்க்கைக் கனவுகளை தியாகம் செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

மகப்பேறுக்காக தனியார் நிறுவனங்களில் பணியில் இருப்போருக்கு விடுமுறை எடுப்பதில் இருக்கும் சிக்கல்களும் நிதர்சனம். இந்நிலையில் இந்த வாடகைத் தாய் முறை வரப் பிரசாதமாக உள்ளது.