கோடை காலத்துக்கேற்ற அன்னாசி ரசம்
தேவையானப் பொருட்கள்: அன்னாசி பழ துண்டுகள் 1 கப், தக்காளி - 1, புளிச்சாறு - 2 டீஸ்பூன், ரசப்பொடி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் -2.
வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப், வெல்லம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - 1 கொத்து, கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி.
மஞ்சள் துாள் - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.
அரை கப் அன்னாசி பழத்துண்டுகளை, மிக்சியில் நைசாக அரைக்கவும்; மீதமுள்ள பழத்துண்டுகளை அப்படியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், நறுக்கிய தக்காளி, அன்னாசி பழ துண்டுகள், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புளிச்சாறு, மஞ்சள் துாள் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
இதில், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை, ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
ஏற்கனவே வேக வைத்த துவரம் பருப்பை மசித்து, ரசத்தில் சேர்த்து நன்றாக கலக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நுரை கட்டி வரும்போது நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். அதிகமாக கொதிக்க வைத்தால், சுவை மாறிவிடும்.
அடுப்பில் கடாயை வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து கொட்டினால், சுவையான அன்னாசி பழ ரசம் ரெடி.
இதை சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம் அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.