காற்றில் கலந்த கானக்குயில் வாணி ஜெயராம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காளி உட்பட பல்வேறு மொழிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்.
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ... என்ற வாணி ஜெயராம் பாடிய பாடல் இன்றும் இளசுகளின் பேவரிட் பாடலாக உள்ளது.
'வீட்டுக்கு வந்த மருமகள்' என்ற படத்தில் பாடகர் டி.எம்.எஸ்., உடன்
சேர்ந்து பாடிய. 'ஓரிடம் உன்னிடம் நான் கேட்பது' என்ற பாடலே இவர் பாடி
தமிழில் வெளிவந்த முதல் திரைப்பட பாடல்.
'மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை இவர் பாடி உள்ளார்.
தமிழில் எம்.எஸ். விஸ்வநாதன் துவங்கி ஏ.ஆர் ரஹ்மான் வரை பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடி உள்ளார்.
இந்நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வீட்டில் வழுக்கி விழுந்ததில் வாணி ஜெயராம் (78) உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் தான் மத்திய அரசு இவரின் கலைச்சேவையை பாராட்டி பத்மபூஷண் விருது வழங்குவதாக அறிவித்தது. ஆனால், விருதை பெறும் முன்பே அவர் மறைந்தது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாணி ஜெயராம் மறைந்தாலும் அவர் தந்த திரையிசை பாடல்கள் காலத்தால் அழியாமல் என்றும் மக்கள் மனதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டே இருக்கும்.