பள்ளி செல்லும் குழந்தைக்கு வயிற்றுபோக்கு... அலட்சியம் வேண்டாம்
தமிழகத்தில் பகலில் வெப்பமும், மாலையில் பலத்த மழையும் பரவலாக பெய்கிறது. திடீரென மாற்றமடையும் பருவமழையால், பல்வேறு நோய்கள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மழைப் பொழிவால் ஏற்பட்ட குடிநீர் மாசுபாடு, துரித உணவு போன்ற காரணமாக, அதிக குழந்தைகளுக்கு ஜீரண மண்டலம் சார்ந்த பாதிப்புகள் வருகின்றன.
தற்போது மருத்துவமனைக்கு வரும் 50 சதவீதம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, அஜீரண பாதிப்புகள் உள்ளன என டாக்டர்கள் கூறுகின்றனர்.
அதனால், ஒரு சில குழந்தைகளுக்கு நீர்ச்சத்து இழப்பு, காய்ச்சல் ஏற்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை அளிக்காத நிலையில், ஓரிரு குழந்தைகளுக்கு குடல் ஏற்ற பாதிப்பு ஏற்படுகிறது.
அந்த சமயத்தில் நீர், மோர், பழச்சாறு, இளநீர் போன்றவற்றை போதிய அளவு குழந்தைகளுக்கு வழங்கி, உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் காக்க வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே உப்பு, சர்க்கரை கரைசல், துத்தநாக மாத்திரைகளை வழங்கினால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
அவற்றுடன், காய்ச்சிய நீரை பருகுவதுடன் வெளி உணவுகளை தவிர்ப்பது முக்கியம்.
டாக்டர்களை அணுகி பாதிப்பின் தன்மைக்கேற்ப, சிகிச்சைகளை உரிய நேரத்தில் எடுத்து கொள்வது அவசியம்.