ரத்தத்தில் உப்புச்சத்து கூடினால் உணவில் உப்பைக் குறைக்கவேண்டுமா?

நாம் உணவில் சேர்க்கும் உப்பு சோடியம். யூரியா, கிரியாட்டினின் போன்ற உப்புகள் எல்லோரின் உடலிலும் சாதாரணமாக தினமும் உற்பத்தியாகும் கழிவுகள்.

இவற்றை வெளியேற்ற வேண்டியது சிறுநீரகங்கள். சிறுநீரகங்களின் செயல்திறன் குறையும் போது இந்த உப்புகள் ரத்தத்தில் கூடும்.

சாதாரணமாக யூரியாவின் அளவு 40க்கு கீழேயும், கிரியாட்டினின் அளவு 1.2க்குக் கீழேயும் இருக்கும்.

எந்த அளவிற்கு இவை அதிகமாக உள்ளதோ அந்த அளவிற்குச் சிறுநீரகங்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக அர்த்தம்.

உணவில் உப்பைக் குறைப்பதன் மூலம் ரத்தத்தில் அதிகரித்துள்ள யூரியாவைக் குறைத்துவிடலாம் என்று நம்புவது தவறு. மாறாக உடல் பலகீனப்படும்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும்.

ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும் போது சோடியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய உப்புகளும் சேர்ந்து வெளியேறும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்து ரத்தஅழுத்தமும் குறையும் பட்சத்தில் உணவில் உப்பைக் கூட்ட வேண்டும்.

அவ்வாறில்லாமல் உடலில் நீர்ச்சத்து அதிகரித்தாலோ (கால்கள் மற்றும் முகம் வீக்கம் அடைதல்) ரத்தஅழுத்தம் கூடினாலோ அவர்களுக்குத்தான் உணவில் உப்பைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.