வரலாற்று பெருமைகளை குழந்தைகளுக்கு சொல்வோம்... உலக பாரம்பரிய தினம் இன்று !
உலக பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் வகையில், யுனெஸ்கோ அறிவுறுத்தலின்படி, ஆண்டுதோறும் ஏப்.,18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களால் பாரம்பரியம் சொத்துகள் குறித்த ஆர்வம் இளைஞர்களிடம் குறைந்துள்ளதால், விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் வலியுறுத்துகிறது.
நம் முன்னோர் விட்டுச் சென்ற பொருட்களும், இடங்களும் தான், நம் பாரம்பரியச் சொத்துக்கள்.
அதில், கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், இஸ்லாமிய, கிறிஸ்துவ வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை வருகின்றன. இவற்றை தொல்லியல் துறையினர் பாதுகாக்கின்றனர்.
மாமல்லபுரம், தஞ்சாவூர், மதுரை உட்பட பல கோவில்களை கண்டு வெளிநாட்டவர் வியக்கின்றனர். அவற்றின் கலையழகு, சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவை பாரம்பரிய சொத்துக்களாகும்.
அங்குள்ள கல்வெட்டுகள், பண்டைய காலத்தின் கிராம நிர்வாகம், நீதி, தேர்தல், வேளாண்மை, நில அமைப்பு போன்றவற்றை கூறுகின்றன.
செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காசுகள் உள்ளிட்டவையும், பாரம்பரிய வரலாற்றை சொல்கின்றன.
கீழடி, ஆதிச்சநல்லுார் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களும், நம் பாரம்பரிய பெருமைகளை எடுத்துச் சொல்கின்றன.
எனவே, பாரம்பரிய பெருமைகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கோவில், அரண்மனை, சிலைகளின் மீது கிறுக்கக் கூடாது; பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும்.