தக்காளி காய்ச்சல்.. என்னென்ன அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்...?
இளம் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கேரளா, ஒடிசா, தமிழகத்தில் இதன் தாக்கம் உள்ளது என சமீபத்தில் 'லான்செட்' ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது 1 - 5 வயது வரையிலான குழந்தைகள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களை தாக்கும் பொதுவான தொற்றான, கை, கால் மற்றும் வாய் நோயின் புதிய மாறுபாடாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இது ஒரு வகை வைரஸ் பாதிப்பு. இந்த நோய், குழந்தைகளை குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது.
தக்காளி காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு, உடலில் கொப்புளங்கள் உருவாகும். அவை சிவப்பாக தக்காளியின் நிறத்தில் இருப்பதால், தக்காளியின் பெயரை சூட்டி விட்டனர்.
இருமல், தும்மலில் வெளிப்படும் சளித்திவலைகளில் உள்ள வைரஸ் மூலமாக இது பரவுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கொப்புளங்களில் இருந்து வெளிவரும் நீரிலும் இந்த வைரஸ் இருக்கும்.
வைரஸ் தொற்றிய 2 நாட்களில் சளி, இருமல், காய்ச்சல் ஏற்படும். உடல் வலி, சோர்வு இருக்கும். உள்ளங்கை, பாதங்கள், வாய், ஆசனவாய் பகுதிகளில் சிவப்பு நிற தடிப்புகள் ஏற்பட்டு, கொப்புளங்களாக மாறும்.
தொண்டையில் எரிச்சல், பசியின்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு, நீரிழப்பு ஏற்படலாம். அறிகுறிகளுக்கு ஏற்ற மருந்துகள் தரப்படுகிறது. பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து ஒரு வாரத்துக்குள் தானாக குணமாகிவிடும்.
தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு வாயில் புண் இருப்பதால் சரிவர சாப்பிட முடியாது. எனவே திரவ வகை உணவை தரலாம். கஞ்சி, பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை தரலாம்.
தக்காளிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான குழந்தைகளை குணமாகும் வரை தனிமையில் வைத்திருப்பது அவசியம். கைகளை அடிக்கடி சோப் கொண்டு கழுவ வேண்டும்.