உடலுக்கு வலிமை தரும் உளுந்தங்களி எப்படிச் செய்வது?

1 கப் கருப்பு உளுந்து மற்றும் 1/4 கப் கவுனி அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி சிறிது நேரம் உலர விடவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து நன்றாக வாசனை வரும் வரை கிளறி, ஆறவைக்கவும்.

மிக்சி ஜாரில் 2 ஏலக்காயுடன் சேர்த்து பவுடராக நன்றாக அரைத்து எடுக்கவும். ஒரு கடாயில் அரைத்த உளுந்துடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து, கட்டிகள் தட்டாமல் நன்றாக கரைத்து விடவும்.

அடுப்பை மிதமான தணலில் வைத்து, உளுந்து கரைசலை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கெட்டியான பதம் வந்தவுடன், 1 1/2 நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கிளறவும்.

மீண்டும் கலவை கெட்டியாகி அல்வா பதத்துக்கு வந்தவுடன் 1 கப் நல்லெண்ணெயை சேர்த்து கிளறவும்.

கைவிடாமல் சில நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருந்தால், எண்ணெயை களி நன்றாக உறிஞ்சிவிடுவதுடன், கடாயில் சிறிதும் ஒட்டாமல் வரும்.

தொடர்ந்து சில நிமிடங்கள் கிளறும் போது களியில் இருந்து எண்ணெய் பிரியத்துவங்கும்; அடுப்பை அணைத்து விடலாம். இப்போது, சுவையான, ஆரோக்கியமான உளுந்தங்களி ரெடி.

பாரம்பரியமான முறையில் உளுந்து எடுத்த அதே கப் அளவுக்கு நல்லெண்ணெயை சேர்க்கலாம். அப்போது சுவையும் அதிகரிக்கக்கூடும். செக்கு எண்ணெயாக இருந்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

நாட்டுச்சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி போன்றவற்றையும் சேர்க்கலாம். மேலும், சுவைக்கேற்ப இனிப்பின் அளவை கூடுதலாகவும் சேர்க்கலாம்.