தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?

தற்போதைய நாகரிக உலகில் வெயில், மழை பாராமல் பலரும் இருசக்கர வாகனத்தில் மணிக்கணக்காக பயணிக்கும்போது, நீண்ட நேரத்துக்கு ஹெல்மெட் அணிய வேண்டியுள்ளது.

ஹெல்மெட் உயிரைக் காக்கும் என்றாலும், இதனால் தலையில் ஏற்படும் கனம், முடியில் உண்டாகும் வியர்வை போன்றவை வாகன ஓட்டிகளை வெகுவாகவே பாதிக்கிறது.

முப்பது வயதைக் கடந்த இளைஞர்களுக்கு முடியின் அடர்த்தி படிப்படியாகக் குறையத் துவங்குவதால் முடியைப் பாதுகாக்க பல முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஹெல்மெட் அணிவதால் நாளடைவில் முடியின் அடர்த்தி குறையுமா என பலருக்கு சந்தேகம் எழும். இதற்கு மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.

ஹெல்மெட்டின் உள்ளே உள்ள குஷன் தலைமுடியை சில மணி நேரங்கள் அழுத்திப் பிடிக்கும். இதனால், முடி கொட்டும் என்பதற்கு எந்த நிரூபணமும் கிடையாது.

பெண்கள் தலைமுடியை அழுத்தி வாரி, பின்னலிடுவது, கொண்டை போடுவது போன்றவற்றை செய்யும்போதுகூட முடி அழுத்தப்படுகிறது. ஆனால் இதனால் முடி கொட்ட வாய்ப்பில்லை.

வெயிலில் பலமணி நேரம் ஹெல்மெட் அணிந்து லாங் ரைட் செல்பவர்கள், அவ்வப்போது அதை அகற்றி முடியின் வேர்க்கால்களில் வியர்வை தங்காமல் உலர்த்துவது நல்லது.

தினமும் ஒரு மணிநேர அலுவலகப் பயணம் செய்பவர்கள் இப்படி செய்யத் தேவையில்லை. முடியின் வேர்க்கால்களை வியர்வை பாதிப்பதால் மிகத் தாமதமாக முடி உதிர்வு உண்டாக வாய்ப்புள்ளது.