ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை எடுத்தாலும் படுக்கையை விட்டு எழும்போது மயக்கம் வருவதேன்?

முதுமையில் ஒருசிலர் நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து, அவை கட்டுக்குள் இருந்தாலும், சில சமயங்களில் படுக்கையை விட்டு எழும்போது மயக்கம் வரக்கூடும்.

இதை 'நிலை மயக்கம்' என்பர். முதுமை காரணமாக ரத்தக்குழாய்களின் உட்சுவர் தடித்து சுருங்கி விரியும் தன்மையை இழந்து விடும்.

உடலின் கீழ் பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால், திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.

குறிப்பாக, நீண்ட நேரம் உட்கார்ந்து எழும்போது, காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, சாப்பிட்டு முடித்தவுடன், சிறுநீர், மலம் கழித்ததும் என பல சூழல்களில் மயக்கம் வரக்கூடும்.

இதைத் தவிர்க்க, கட்டிலின் தலைப்பகுதியை அரையடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது.

சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக் கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

ஒரே வேளையில் வயிறுமுட்டச் சாப்பிடுவதைவிட, அரை வயிற்றுக்கு அடிக்கடி சாப்பிட வேண்டும்.

சிறுநீர், மலம் கழிக்கும்போது முக்கக் கூடாது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால் மீளுறைகளை (எலாஸ்டிக் ஸ்டாக்கிங்ஸ்) அணிந்து கொள்ளலாம்.