குழந்தைக்கு தூக்கத்தின் அவசியமென்ன? குறைவாக தூங்கினால் கையாள்வது எப்படி?
தூக்கம் ஒரு அத்தியாவசியமான உடலியல் செயல்முறை. இது குழந்தையின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியுடன் பகல் நேர சுறுசுறுப்புக்கு உறுதுணையாக உள்ளது.
குழந்தைப்பருவம் முதல் பள்ளிப்பருவம் வயது வரை தூக்கத்தின் நேரம் வேறுபடும். பிறந்தது முதல் மூன்று மாதங்கள் வரை 3 முறை வீதம் 14 - 17 மணி நேரம் தூக்கம் இருக்கும்.
4 - 11 மாதங்கள் வரை 2 முறை வீதம், 2 - 15 மணி நேரம் துாக்கம் இருக்கும்.
2 வயது வரை தினமும் 11 - 14 மணி நேரமும், 3 - 5 வயது வரை அதிகபட்சமாக 13 மணி நேர தூக்கம், 13 வயது வரை 11 மணி நேர தூக்கம், 17 வயது வரை 10 மணி நேரம் தூக்கம் இருக்கும்.
சரியாக தூங்காவிட்டால் பகல் நேர தூக்கம், எரிச்சல், படிப்பில் ஆர்வமின்மை ஏற்படும்.
உடல் கடிகாரத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழ வேண்டும். விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
அமைதியான சூழல், மங்கலான விளக்குகள், அறையின் வசதியான வெப்பநிலை ஆகியவை தூக்கத்தை மேம்படுத்தும்.
ஒரு வயது வரை கையில் ஏந்தியோ அல்லது தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடியோ தூங்க வைக்கலாம்.
2 வயது வரை தூக்க நிலையிலுள்ள குழந்தையை தனியறையில் அமைதியான சூழலில் விட்டு பழக்கலாம். அழுதால் மட்டும் சமாதானம் செய்து மீண்டும் தனியே தூங்க பழக்கவும்.
பள்ளி செல்லும் குழந்தைகளை அமைதியான சூழலில் கதை சொல்லி தூங்க வைக்கலாம்.
தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க செய்யலாம். தூங்குவதற்கு 1 மணி நேரம் முன் அலைபேசி, டிவி பார்ப்பதை நிறுத்தவும். காபி, சாக்லேட் பானங்கள் தரக்கூடாது.