சாகசப்பிரியரா நீங்க? மேகாலயாவில் மறைந்திருக்கும் குகைகளுக்கு ஒரு விசிட் செய்யலாமே !
'மேகங்களின் உறைவிடம்' என அழைக்கப்படும் மேகாலயாவில் கொட்டும் நீர்வீழ்ச்சிகள், அழகிய புல்வெளிகள், அடர்ந்த காடுகள் மட்டுமின்றி குகைகளின் அழகும் பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது.
தெற்காசியாவின் மிக நீளமான இயற்கை குகையான கிரெம் லியாட் ப்ரா இங்கு தான் உள்ளது. இது, மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தின் ஷ்னோங்கிரிம் பகுதியில் அமைந்துள்ளது.
அதேப்போல், உலகின் மிக நீளமான மணற்கல் குகையான கிரெம் பூரி இங்குதான் உள்ளது. இது மேகாலயாவில் உள்ள மவ்சின்ராமில் (கிழக்கு காசி மலைகள்) லைட்சோஹாம் கிராமத்துக்கு அருகிலுள்ளது.
சிரபுஞ்சியில் உள்ள மவ்ஸ்மாய் குகை பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். மவ்ஸ்மாய் குகையின் நுழைவாயிலை அடைய அடர்ந்த காடு வழியாக ஒரு சிறிய டிரெக்கிங் செல்ல வேண்டும்.
கிரெம் லியாட் ப்ரா குகையை ஒப்பிடும் போது, இந்த குகை மிகவும் சிறியதாக உள்ளது. ஆனால், துவக்கநிலையில் உள்ள சாகச பிரியர்களுக்கு இது உகந்ததாகும்.
புதைப்படிவங்களுக்கு இந்த மவ்ஸ்மாய் குகை பிரபலமானது. உயிரினங்களின் புதைப்படிவங்கள் ( உட்பொதிக்கப்பட்ட கடல் உயிரினங்கள் ) குகையின் சுவர்களில் பாதுகாக்கப்படுகின்றன.
தற்போது சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாகச நடவடிக்கைகளில் ஒன்றாக குகைகள் மாறி வருகின்றன. அனுபவம் மிக்க வழிகாட்டியின் துணையுடன் தான் குகைகளில் சாகசம் செய்ய வேண்டும்.