உலகின் வானவில் தலைநகரம் ஹவாய்..! ஏன் தெரியுமா?

மழையின்போது வானவில் தோற்றுவது அழகான இயற்கை நிகழ்வுகளில் ஒன்று. இது பிற்பகலில் பெய்யும் மழைக்குப் பின்னர் வானில் தோன்றும்.

தி சீக்ரட்ஸ் ஆஃப் தி பெஸ்ட் ரெய்ன்போ ஆன் எர்த் (The Scerets of the best rainbow on Earth) என்கிற புதிய ஆய்வு அமைப்பு, உலகின் வானவில் தலைநகரமாக ஹவாய் தீவுகளை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மனோவா ஹவாய் பல்கலைக்கழகத்தில் வளிமண்டல அறிவியல் துறைத் தலைவரான ஸ்டீவன் பஸ்சிங்கர் (steven businger) வானவில் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தினார்.

ஒருசில நாடுகளில் வானவில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். ஆனால், ஹவாய் தீவுகள்தான் வானவிலைப் பார்த்து ரசிக்க சிறந்த இடமாக உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வானவில் தோன்றுவதற்கு தண்ணீர் மற்றும் ஒளி மிகவும் அவசியம். இவ்விரண்டிற்கும் ஹவாயில் பற்றாக்குறையே இல்லை.

மழை மற்றும் சூரிய ஒளி கலப்பதன்மூலம் இங்கு குறிப்பிட்ட இடங்களில் வானவில் உருவாகின்றன. இதற்கு சூரியன் அடிவானத்திலியிருந்து நாற்பது டிகிரிக்குள் இருக்க வேண்டியது அவசியம்.

ஹவாய் தீவுகள் 'துணை வெப்பமண்டல பசிபிக்' என்னும் பகுதியில் அமைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேலும், சூரிய ஒளி எப்போது மிதமான பிரகாசத்துடனே இருக்கும்.

எனவே இப்பகுதியில் குளிர் மற்றும் மழைக்காலங்களில் (நவ., முதல் ஏப்., வரை) அழகான வானவில்லைப் பார்த்து ரசிக்கலாம். இங்கு ஏராளமான வானவில்களைப் பார்க்கலாம்.

குறிப்பாக சூரிய வெளிச்சம் குறைவாக உள்ள மாலை நேரங்களில் இவற்றைக் காணலாம். வானவில் உருவாக்கத்துக்கு பெரும்பாலும் ஹவாய் மலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இவை இங்குள்ள காற்றை வலுப்படுத்தி மேகங்களை உருவாக்குகின்றன. ஒருவேளை ஹவாய் தீவுகள் மலைகள் அற்ற வெட்டவெளியாக இருந்திருந்தால் இப்பகுதி பாலைவனமாகவே இருந்திருக்கும்.