சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு இனி கட்டுப்பாடு... தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை !
சமூக வலைதளங்களில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்கள், போலி செய்திகளை பலரும் சமூக விரோதமாக வெளியிடுவதால், பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சூழலில், சமூக வலைதளங்களில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலி தகவல்களை பரப்பக்கூடாது.
அதில், ஆபாச படங்கள், போலி ஆவணங்கள் மற்றும் போலியான மின்னணு தரவுகளை பதிவிட்டால், சட்டவிரோதமாக கருதப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதன்படி, தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் 2021ல், இதற்காக திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன; வரும் 20ம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வருகிறது.
புதிய விதிகளின்படி ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் எந்தவொரு தகவல்களை பரிமாறினாலும், அதை சித்தரிக்கப்பட்ட பதிவு என முத்திரை குத்த வேண்டும்.
அந்த முத்திரை சமூக வலைதள பயனாளர்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும். இதை அழிக்கவோ, அகற்றவோ அனுமதிக்கக் கூடாது.
போலி செய்திகளை உருவாக்கி பதிவிட்டால், கணக்கை தற்காலிகமாக முடக்குவது, சட்டப்படி அபராதம் விதிப்பது அல்லது வழக்கு தொடர்வது என எச்சரிக்கைகள் வழங்க வேண்டும்.
ஏ.ஐ., தொழில்நுட்ப வசதிகளை, கருவிகளை தவறாக பயன்படுத்துவது தண்டனைக்கு வழிவகுக்கும் என, பயனாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதிய சட்டத்திருத்தத்தில் மிக முக்கியமானது என்னவெனில், அரசு மற்றும் போலீஸ் உத்தரவுகளுக்கு உடனடியாக வலைதளங்கள் பதிலளிக்க வேண்டும் என்பது தான்.
இதற்கு முன்பிருந்த சட்டத்தில், அரசு அல்லது போலீசின் உத்தரவுகளுக்கு 36 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என இருந்தது. தற்போது இது 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குறைகளை இனி ஒரு வாரத்திற்குள் தீர்க்க வேண்டும். அவசர வழக்குகள் எனில், 72 மணி நேரத்திற்கு பதிலாக 36 மணி நேரத்திற்குள் விசாரித்து தீர்க்க வேண்டும்.
ஒரு சில நடவடிக்கைகள் இரண்டு மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.