ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலியாக ரயில் ஒன் அறிமுகம்

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிக்க, நடைமேடை சீட்டு பெற என, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலிகளை பயன்படுத்தும் நிலை உள்ளது.

இவை, அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே செயலியில் எல்லா சேவைகளையும் பெறும் வகையில், 'ரயில் ஒன்' செயலியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் பயணியர் தங்கள் பயண டிக்கெட் முன்பதிவு செய்வதுடன், அதன் நிலைப்பற்றி அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் முன்பதிவு இல்லா டிக்கெட்டுகளையும் பெறலாம். தொலைதுார பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு தேவையான உணவுகளை 'ஆர்டர்' செய்யலாம்.

இதுதவிர, ரயில்வே நிர்வாகத்தின் உதவி எண்களையும் எளிதாக தொடர்பு கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

பயணியர் பார்சல்களை வெளியூர்களுக்கு அனுப்புவது குறித்த தகவல்களை கேட்டறியும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ்., இயங்குதளங்களை பயன்படுத்தி, இச்செயலியை டவுன்லோடு செய்யலாம்.

ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் யு.டி.எஸ்., செயலிகளை பயன்படுத்தும் பயணியர், அதே விபரங்களை பதிவிட்டு, ரயில் ஒன் செயலியை பயன்படுத்தலாம்.

மற்ற செயலிகளில் இருப்பதுபோல், ரயில்வே வாலட் வசதியும் உள்ளது.