நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் 'செரெலாக்' உணவுப் பொருளில், சர்க்கரை அளவு அதிகம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில், 'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான செரெலாக் குழந்தைகள் உணவில், அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதுக் குறித்து விசாரணை நடத்தும்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் செரெலாக் உணவில், ஒரு ஸ்பூன் உணவில் 2.7 கிராம் சர்க்கரை இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் செரெலாக்கில், அந்த அளவு சர்க்கரை சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக அளவு சர்க்கரை உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை குறித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.