ஆப்ரிக்க வகை நத்தை...வெறும் கையால் தொட்டால் தொற்று நிச்சயம் !
தமிழகம் முழுதும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில், ஆப்ரிக்க வகை பெரிய நத்தைகள் அதிகம் காணப்படுகின்றன. 'லிசாசாட்டினா புலிக்கா' என்ற விலங்கியல் பெயரில் அழைக்கப்படுகிறது.
இவற்றால் நேரடி பாதிப்பு இல்லாவிட்டாலும், அவற்றை வெறும் கைகளால் தொடுவதன் வாயிலாக, மூளைக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டன் ஆய்வாளரால், 19ம் நுாற்றாண்டில் இந்தியா எடுத்து வரப்பட்ட ஆப்ரிக்க நத்தைகள், தற்போது ஆங்காங்கே பெருகி, விவசாய பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
'ஆஞ்சியோ ஸ்டராங்கைலஸ்' என்ற ஒட்டுண்ணி, எலிகளிடையே தொற்றை ஏற்படுத்தி, அதன் உடலில் பெருக்கமடையும். எலிகளின் கழிவு வாயிலாக, ஒட்டுண்ணி வெளியேற்றப்படுகிறது.
ஆப்ரிக்க நத்தைகளின் முக்கிய உணவான, எலிக் கழிவு வாயிலாக ஒட்டுண்ணிகளை கடத்துகின்றன. நத்தை நகரும்போது, ஜவ்விலிருந்து வெளியேறும் நீரிலும் தொற்று பரவியிருக்கும்.
அதை தொட்ட கைகளால், மூக்கு, வாய் பகுதிகளை தொடும்போது, 'ஆஞ்சியோ ஸ்ட்ராங்கைலஸ்' பாதிப்பு நமக்கு பரவுகிறது. இது, காய்ச்சல், மயக்கம் போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தொடர்ந்து, 'ஈசினோபிலிக் மெனிங்கோ என்சபலிட்டிஸ்' என்ற மூளைக் காய்ச்சலையும் ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகிவிடும்.
எனவே, வீடுகளுக்கருகே காணப்படும் நத்தைகளை, வெறும் கையால் தொட்டால், உடனடியாக சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும்.
அவை தென்பட்டால், நேரடியாக கை படாதவாறு அகற்ற வேண்டுமென அரசு பொது நல மருத்துவர் பரூக் அப்துல்லா அறிவுருத்தியுள்ளார்.