தமிழகத்தில் 3 இடங்களில் காற்று மாசு

தமிழகத்தில் தொழிற்சாலைகளில் வெளியேறும் புகை, சாலைகளில் உள்ள மண் புழுதி, வாகனப்புகை, கட்டுமான பணிகள் உட்பட பல காரணங்களால், காற்று மாசு அதிகரித்து வருகிறது.

காற்று மாசு அதிகமுள்ள பகுதியில் வசிப்போருக்கு, நுரையீரல், சுவாச பிரச்னை என, பல்வேறு உடல் நல பிரச்னைகள் உருவாகும் அபாயமுள்ளது.

காற்று மாசு அளவை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் கணக்கிட்டு, அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

காற்று மாசுபாடு தரக்குறியீடு 0 - 50 என்ற அளவில் இருப்பது, பிரச்னை இல்லை என்பதை குறிக்கும். தரக்குறியீடு, 50 - 100 வரை இருப்பது திருப்திகரமானது.

101 - 200 வரை மிதமானது: 201 - 300 வரை மோசமானது; 301 - 400 வரை மிக மோசமானது என, காற்று மாசு அளவீடு வகைபடுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியான, சென்னை மணலியில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில், காற்றின் தரக் குறியீடு 200 - 300 வரை பதிவாகிறது.

சில நேரங்களில் 300க்கும் மேல் காற்றின் தரக்குறியீடு பதிவாகிறது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 100 - 200 வரை; துாத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் பகுதியில், 100 - 200 வரை காற்றின் தரம் மிதமான மோசம் என பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில், காற்றின் தரக்குறியீடு 50 - 100 வரை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.