தென் மாநிலங்களை நோக்கி நகரும் காற்று மாசுபாடு... ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
வட இந்தியாவில் காற்றின் தரம் குறைந்து வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக டில்லியில் இதன் பாதிப்பு மிக அதிகம்.
இதற்கு தீர்வாக அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை, பழைய வாகனங்களுக்கு தடை, எரிவாயு மூலம் வாகனங்கள் இயக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தற்போதைய ஆய்வில், வட மாநிலங்களிலிருந்து நச்சுக்காற்று நூற்றுக்கணக்கான கி.மீ., தூரம் பயணித்து தென் மாநிலங்களிலும் பாதிப்பை உருவாக்குவதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி, எஸ்.ஆர்.எம் பல்கலையுடன் கேரள கல்லூரி உதவி பேராசிரியர் 3 ஆண்டுகளாக நடத்திய ஆய்வு கவனத்தை ஈர்த்துள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 1 - 3 கி.மீ., உயரத்தில் தூசித் துகள்கள் நிலைத்திருப்பது வெப்பநிலையை கிட்டத்தட்ட 2 டிகிரி உயர்த்துகிறது.
காற்றின் மாசுபாடு 60 % அதிகரித்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால், கேரளா, தமிழகத்தில் பெரும் சுற்றுச்சூழல் சவால் உருவாகியுள்ளது.
மாசுபட்ட காற்றை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறு பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்புள்ளது. மாசுபாட்டின் தாக்கத்தை அறிய தொடர் ஆய்வுகள் நடக்கிறது.