இன்று உலக காசநோய் தினம்

ஜெர்மன் விஞ்ஞானி ராபர்ட் கோச், 1882 மார்ச் 24ல் 'காசநோயை' உருவாக்கும் பாக்டீரியாவை கண்டு பிடித்தார். இது அந்நோயை கண்டறிந்து குணப்படுத்த உதவியது.

இவரின் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக மார்ச் 24ல் உலக காசநோய் தினம் கடை பிடிக்கப்படுகிறது.

'ஆம், காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்: உறுதிசெய், முதலீடு, விடுவித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

'டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது.

இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும் மூளை, கிட்னி, முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது.

தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை அறிகுறிகள்.

துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை மேற்கொள்வது, நீண்ட கால சிகிச்சை ஆகியவை இந்நோயிலிருந்து பாதுகாக்கும்

காச நோய் உள்ளவர்கள், தயங்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.