கண் முன் கனவுலகம்.. பார்க்கத் தூண்டும் மேகாலயா...!
அனைவரையும் கட்டிப்போட்டு ரசிக்க வைக்கும் விஷயங்களில், இயற்கை அழகுக்கு இணை கிடையாது. அப்படிப்பட்ட இயற்கை அழகு கொட்டிக் குவிந்துள்ள இடங்களில் ஒன்று மேகாலயா.
ஈரப்பதம் மிக்க இந்நகரின் எழிலான சூழல், ஏரிகளின் அழகு, படகுச்சவாரி என உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், வெகுவாக ஈர்த்து வருகிறது இந்த மேகாலயா மாநிலம்.
மர வேர்களால் ஆன பாலம், விசித்திரமான குகைகள், கொட்டும் நீர்வீழ்ச்சி என இங்கு பல இடங்கள் வாழ்வில் ஒரு முறையாவது ரசிக்க வேண்டிய இடங்களாகும். அவற்றில் ஒரு சில...
எழில் கொஞ்சும் மலைகள், அடர்ந்த காடுகள், விளையாடும் வெண் மேகங்கள் என அனைவரையும் வசீகரிக்கும் சில்லாங், கிழக்கின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான நொகாலிகாய் நீர்வீழ்ச்சியில், அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு பிரம்மாண்டமான பாறைகளில் தண்ணீர் விழுவது ஒருகணம் மூச்சடைக்க வைக்கிறது.
சிரபுஞ்சி அருகே ரப்பர் மரங்களின் வேர்களால ஆன இரட்டை அடுக்கு பாலத்தில் (டபுள் டெக்கர் லிவிங் ரூட் பிரிட்ஜ்) நடந்து செல்லும் போது கிடைக்கும் அனுபவமே தனிதான்.
மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள மாவ்லின்னாங், ஆசியாவிலேயே சுத்தமான கிராமம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. பனிமூட்டம் நிறைந்த மலையழகு இயற்கைப்பிரியர்களை ஈர்க்கிறது.
தெளிவான தண்ணீருடன் கூடிய அழகிய நதிக்கு பெயர் பெற்றது டவ்க்கி. தண்ணீரின் அழகை ரசித்துக் கொண்டே படகு சவாரி செய்ய விரும்புவோருக்கு ஏற்ற இடமாகும்.
லைட்லம்... மலைகளின் அருகே தாழ்வாக பறக்கும் மேகங்கள், பரந்து விரிந்த பசுமையான நிலப்பரப்புகள் என்று கனவுலக காட்சிகள் கண்முன் விரிகிறது.
மவ்ஸ்மாய் குகைகள், மவ்சின்ராம், சிரபுஞ்சி, காசி மோனோலித்ஸ், கோஹ் ராம்ஹா பாறை உட்பட பல தலங்கள் சுற்றிப்பார்க்க ஏராளமான இயற்கை அழகை குவித்து வைத்துள்ளன.