சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய, வளர்பிறை திதி, 'அட்சய திரிதியை' என, கொண்டாடப்படுகிறது.

ஷகிம் என்றால் தேய்தல். அட்சயம் என்றால் வளர்தல். ஆகவே, மூன்றாம் பிறை நாளான, வளர்பிறை திரிதியை திதியில், எந்த சுபகாரியம் செய்தாலும் அது, வளர்ச்சியடையும் என்றே, அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது.

அட்சய திரிதியையன்று, சிவனை வழிபடுவதால், சகல பாக்கியங்களையும் பெறலாம். இந்நாளில், நாம் எது செய்தாலும், அது இரட்டிப்பாகும்.

இந்நாளில், மேற்கொள்ளக் கூடிய, தவங்கள், ஹோமங்கள், பூஜைகள், தானங்கள், முன்னோர்களுக்கான தர்ப்பணங்கள், புனித தீர்த்தத்தில் நீராடுதல் உள்ளிட்டவையும், அளவில்லா பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.

திருமணமாகாத கன்னிப்பெண்கள், நல்ல கணவனை வேண்டி, மூன்றாம் பிறையை பார்த்து, அம்மனை தொழுது, எந்த காரியம் செய்தாலும், வெற்றி பெறும் என்பது, பெரியோர் கருத்து.

அன்றைய தினம், சிறிய அளவில், தங்கம் வாங்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம். தங்கம் மட்டுமல்ல பொன்மணிகள், நவமணிகள், நவரத்தினங்கள், சுப காரியங்கள் என, அனைத்துக்கும் உகந்த நல்ல நாள், அட்சய திரிதியை.

அட்சய திரிதியை நாளை, பரசுராமர் அவதாரம் செய்த நாளாக வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர், வட மாநிலத்தவர்கள்.

பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் குறையாமல் ஆடை வழங்கிய நாளாகவும், சூரிய பகவான், பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரம் வழங்கிய நாளாகவும் கூறுகின்றனர்.