அசைவ உணவு சுவையில் அசத்தலான சைவ உணவுகள்!

சைவ ஆம்லெட்டுக்கு... ஒரு பாத்திரத்தில் கடலை மாவு - 6 டே.ஸ்பூன், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாகக் கலக்கவும்.

இதில், பொடியாக நறுக்கிய சி.வெங்காயம் - 15, பெ.வெங்காயம் - 1, சிறிது கொத்தமல்லி , ப.மிளகாய் - 2 ஆகியவற்றை சேர்க்கவும். விருப்பத்துக்கேற்ப காய்கறிகளையும் சேர்க்கலாம்.

பின், கடாயில் சிறிது வெண்ணை விட்டு கலவையை ஊற்றி இரு பக்கமும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை இல்லா ஆம்லெட் ரெடி.

சைவ மீன் வறுவலுக்கு... வரமிளகாய் - 15, மிளகு - 1 டீஸ்பூன், சோம்பு மற்றும் சீரகம் தலா 1/2 டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் 3 வாழைக்காயை நீளவாக்கில் மீன் போல் நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். ஒரு பவுலில் அரைத்த மசாலா கலவையுடன் 2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதனுடன், சோள மாவு மற்றும் அரிசி மாவு தலா - 1 டீஸ்பூன், தேவையான அளவு உப்பு, நறுக்கிய வாழைக்காயை சேர்த்து 20 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வாழைக்காயை பொரித்து எடுத்தால் போதும. மணமணக்கும் சுவையான சைவ மீன் வருவல் ரெடி.