பன்றிக் காய்ச்சல் பரவல் எதிரொலி: பொது மக்களுக்கு இந்திய மருத்துவக் கழகம் அறிவுரை

டில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், மக்கள் தாமாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது என இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தி உள்ளது.

தற்போது பரவி வரும் வைரஸ் எச்1என்1 வகையைச் சேர்ந்தது தான். அதில் புதிதாக எந்த மரபணு மாற்றமும் ஏற்படவில்லை என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உறுதி செய்துள்ளது.

மழை காலங்களில் வழக்கமாக பரவும் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே, கவனமாக இருப்பது முக்கியமானது.

மக்கள் பதற்றப்படாமல் தொற்று அறிகுறி இருந்தால் மருத்துவமனையை நாட வேண்டும். தாங்களாவே, அசித்ரோமைசின், அமோக்சலின் உள்ளிட்ட ஆண்டி பயாடிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.

தாமாகவே மருந்துகளை வாங்கி உட்கொண்டால் அவை உடலை பாதுகாக்கும் மைக்ரோபயோம்களை அழித்து நுண்ணுயிர் எதிர்ப்பி எதிர்ப்பு நிலையை உருவாக்கிவிடும்.

அதனால் ஆண்டி வைரஸ் மருந்துகளையும் தாமாக வாங்கி சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது.

நோயின் தீவிரத்தை பரிசோதித்து டாக்டர் வழங்கும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின்போது, சுகாதாரத்தை கடைப்பிடித்தல் அவசியம்.

மேலும் போதிய ஓய்வு, திரவ உணவு உட்கொள்ளுதல் போன்ற, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் தற்போது பருவகால காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும், நிலைமை முழுமையாக கட்டிப்பாட்டில் உள்ளது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.