ஆந்திரா ஸ்டைல் ஸ்டப்டு கத்திரிக்காய் ப்ரை

தேவையானப் பொருட்கள்: கத்திரிக்காய் - 300 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு, துருவிய வெல்லம், உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவைக்கேற்ப.

கொத்தமல்லி விதை, எள் - தலா 1.5 டீஸ்பூன், கடலை பருப்பு - 2.5 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் - 5, சீரகம், வெந்தயம், கடுகு - தலா 0.5 டீஸ்பூன், பெருங்காயம் - 0.25 டீஸ்பூன்.

அகலமான கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கொத்தமல்லி விதைகளை போட்டு, பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். இதேபோல், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பையும் வறுக்கவும்.

பின் காய்ந்த சிவப்பு மிளகாய், வெந்தயம், சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, நன்றாக வறுத்த பின், எள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்தெடுக்கவும்.

அவை சூடாறியவுடன் உப்பு சேர்த்து, மிக்ஸி ஜாரில் கொரகொரப்பான பொடியாக அரைத்து, கத்திரிக்காயை நீளவாக்கில் நான்காக கீறி, இந்த பொடியை நிரப்பவும்.

அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.

மசாலா பொடி நிரப்பிய கத்திரிக்காய்களை ஒரே அடுக்காக வைத்து, 3 நிமிடங்கள் அதிக தணலில் சமைக்கவும். பின், கடாயை மூடி வைத்து, 12 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக விடவும்.

கருகிவிடாமலும், பாத்திரத்தில் ஒட்டாமல் அவ்வப்போது இருபக்கமும் திருப்பிப் போடவும். பின், மூடி இல்லாமல், குறைந்த தணலில் மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும்.

பின், கத்திரிக்காய்களின் மீது புளிச்சாறு, துருவிய வெல்லம் மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து, அவை மென்மையாகும் வரை தொடர்ந்து சமைக்கவும்.

கத்திரிக்காய்கள் நன்கு வறுபட 15 - 20 நிமிடங்களாகும். அதில் ஈரப்பதம் இருக்காது. அவல் சாதம், சாம்பார் மற்றும் அப்பளத்துடன் பரிமாற சுவை அள்ளும்.