தன்னம்பிக்கையுடன் குழந்தை வளர தகுந்த ஆடை அவசியம்

பெண் குழந்தைகளின் உடலில், டீன் -ஏஜ் ஆரம்பத்தில் மாதவிடாய் துவங்கும் போது, 'ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்' செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களால் மார்பக வளர்ச்சி ஆரம்பிக்கும்.

இந்த மாற்றங்களால், பெண் குழந்தைகளின் மனதில் பயம், குழப்பம், கூச்சம், தயக்கம் போன்ற கலவையான உணர்வுகள் தோன்றும்.

குறிப்பாக, இப்போதெல்லாம், 11 - 12 வயதுள்ள பெண் குழந்தைகள் பருவமடைந்து விடுகின்றனர். மார்பக வளர்ச்சி ஏற்பட துவங்கி விடுகிறது.

அது குறித்து பேச அவர்கள் தயக்கப்பட்டாலும், பெண்களின் தாயே அதை எடுத்துச் சொல்லி, அதற்கேற்ற உள்ளாடையை அணிவிக்கச் சொல்லி, குற்ற உணர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும், அவர்கள் ஓடியாடி விளையாடும் போது, கச்சிதமான உள்ளாடைகள் இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். உள்ளாடை அணியும் போது மார்பக வலி, கழுத்து வலி குறையும்.

இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் என்னவெனில், மார்பக வளர்ச்சிக்கேற்ப, உள்ளாடைகளையும் மாற்ற வேண்டும் என்பது தான்.

உள்ளாடை அணியும் போது மேற்கூறிய பாதுகாப்பு விஷயங்களுடன், கூன் முதுகுடன் நடக்கும் பழக்கத்தையும் தவிர்க்கலாம்.

இதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் ஏற்படும்; பாதுகாப்பாகவும் உணர்வர்.