நீங்க 40 பிளஸ்ஸா? தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி அவசியம்
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பாதிக்கும் உடல் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு.
இந்த வயதில் வரும் 80 % சிறுநீர் பிரச்னைகளில், 60 % சிறுநீர் கசிவு தான். பிரசவ நேரத்தில் பிரச்னைகள் இருந்திருந்தால், இப்பாதிப்பு 30 வயதிலும் வரலாம்.
இருமல், தும்மல் வரும்போது, வேகமாக நடந்தால், சிரித்தால், குனியும் போது, சிறுநீர் கசிவு ஏற்படும். இது, 'ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்' எனப்படும்.
இதற்கு பயந்து, நிறைய பெண்கள் நடை பயிற்சி செய்யாததால் உடல் பருமனாகிவிடும். தொடர்ந்து பல பிரச்னைகள் வரும். பின், டாக்டரிடம் காரணத்தை தேடும்போது சிறுநீர் கசிவின் பாதிப்பாக இருக்கும்.
பிரசவத்தின் போது இடுப்புத் தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்குப் பின், தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி செய்ய செய்யாவிட்டால், வயதாக ஆக, மேலும் வலுவிழக்கும். இதுதான் கசிவுக்கு காரணம்.
சிறுநீர் கசிவு இருந்தால் தோல் தொற்று, சிறுநீரகத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. துர்நாற்றம் வீசுவதால் வீட்டிலும், வெளியிலும் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.
கட்டுப்பாடின்றி சிறுநீர் கசிவது தெரிந்தால், உடனே டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். இடுப்புத் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் செய்தால், பிரச்னையை சரி செய்யலாம்.
பிரச்னை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால் பலன் இல்லை. இடுப்புத் தசைகளுக்கு 'சப்போர்ட்' செய்ய, 'ஸ்லிங்' வைக்க வேண்டும்.
சிறுநீர் கசிவு பாதிப்புள்ள 60 % பெண்களில், 45 % , சிறுநீர்ப்பை கூடுதலாக வேலை செய்யும் 'ஓவர் ஆக்டிவ் பிளாடர்' பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம்.
இதனால் கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக கழிப்பறைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். இரவில் துாக்கம் கெடுவதுடன், நீர்ச்சத்தும் குறையும். மருந்து, மாத்திரைகள் மூலம் இதை சரி செய்யலாம்.